திரைப்படம் தொடர்பான விழாக்களில் அவ்வளவாக முக்கியத்துவம் இல்லாத ஆட்களைத்தான் முதலில் பேச அழைப்பார்கள்.
கடைசியில்தான் சிறப்பு விருந்தினரை பேச அழைப்பார்கள்.
திரைப்பட விழாக்களில் பெரும்பாலும் படத்தின் ஹீரோவே கடைசியாக அழைக்கப்படுவார்.
கவிஞர் வைரமுத்து கலந்து கொள்ளும் விழாக்களில் மட்டும் இந்த ஆர்டர் மாறும்.
எப்பேற்பட்ட அப்பாடக்கர்கள் விழாவுக்கு வந்திருந்தாலும் வைரமுத்துவைத்தான் கடைசியில் பேச அழைப்பார்கள்.
அவரும் அதற்கு ஏற்றார்போல் ஏற்ற இறக்கங்களுடன் சுவையாக, சுவாரஸ்யமாகப் பேசி அரங்கத்தை ஆச்சர்யப்படுத்துவார்.
மணிரத்னம் இயக்கியுள்ள ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் ‘ஆடியோ சக்சஸ் மீட்’டில் ஏனோ இந்த வழக்கம் மாறிப்போனது.
நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கிய ரம்யாவுக்கு இந்தத் ‘தர வரிசை’ தெரியாமல் இருக்காது.
ஆனாலும், என்ன காரணத்தினாலோ விழா தொடங்கியதும் முதல் ஆளாக வைரமுத்துவை பேச அழைத்தார் ரம்யா.
சாதாரணமாகவே கருத்த நிறமுடைய வைரமுத்துவின் முகம், முதலில் பேச அழைத்ததினால் மேலும் கருத்திருந்தது.
மேடையேறும்போது வைரமுத்துவின் முகம் மாறியிருந்தது பளிச்சென தெரிந்தாலும், அவர் அதைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் வழக்கம்போல் உரையாற்றினார்…
”மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்திலிருந்து அவரது ‘ஓ காதல் கண்மணி’ படம் வரையில் கடந்த 23 ஆண்டுகளாக நானும் மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பயணித்து வருகிறோம். மணிரத்னத்தின் 24-ஆவது படம் ‘ஓ காதல் கண்மணி’.
24 படங்கள்தானா என்று தயாரிப்புக் கணக்குப் பார்த்தால் அது குறைவுதான்! ஆனால் தர எண்ணிக்கையில் கணக்குப் பார்த்தால் அது அதிகம்தான்! 24 படங்களிலும் 24 விதமான அனுபவங்களை திரை ரசிகர்களுக்கு மணிரத்னம் தந்திருக்கிறார்.”
என்று புள்ளி விவரங்களைச் சொல்லி மணிரத்னத்தை புளகாங்கிதப்படுத்திய வைரமுத்து, போகிற போக்கில் ஒரு தகவலை தன் பேச்சில் கோடிட்டுக் காட்டினார்.
அதாவது, ஓ காதல் கண்மணி படத்தின் கதை சர்ச்சைக்குரியது என்பதை நாசூக்காக
ஊடகங்களுக்குப் ‘போட்டு’க் கொடுத்தார்.
”இந்த படத்தின் கதை, இந்திய சமூகத்தில் ஒரு கலாச்சார அதிர்ச்சியை ஏற்படுத்தும். இந்த கலாச்சார அதிர்ச்சியை கலைஞர்கள் உருவாக்குகிறார்களா? சமூகம் உருவாக்குகிறதா என்பது மிகப்பெரிய கேள்வி! ஒரு திரைக்கலைஞன் சமூக, கலாச்சார அதிர்ச்சியை உண்டாக்க முடியும். ஆனால் அவன் ஒரு வணிக எல்லைக்குள் சிக்கி கொண்டிருக்கிறான்.
என்னை போன்ற படைப்பாளன் சமூக, கலாச்சார எழுச்சியை தனது எழுத்தின் மூலம் உண்டாக்க முடியும். அதுக்கு வணிக எல்லை கிடையாது! ஆனால் ஒரு திரைக்கலைஞன் அதே கலாச்சார அதிர்ச்சியை திரையில் கொண்டு வருவதற்கு பல கோடிகள் முதலீடு செய்ய வேண்டும். அந்த கலாச்சர அதிர்ச்சி வணிக ரீதியாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டால் அவன் தப்பிப்பான். இல்லையென்றால் கஷ்டம்தான்!
இதையெல்லாம் தாண்டி ஒரு பரிசோதனை முயற்சியாக இப்படத்தை இயக்கியிருக்கிறார் மணிரத்னம். இன்னும் ஒரு 50 ஆண்டுகளில் திருமணம் எனும் ஒரு நிறுவனம் இருக்குமா என்பது ஒரு பெரிய கேள்வியாக இருக்கும். இந்த படம் அதற்கு விளக்கம் தரும் படமாக இருக்கும்” என்று சர்ச்சைக்கு திரி கொளுத்திய வைரமுத்து கடைசியில் சொன்னதுதான் பன்ச்.
”இன்னும் நிறைய பேச நினைத்தேன். என்னை முதலில் பேச அழைத்ததால் எல்லாம் மறந்துவிட்டது” என்று சொல்லிவிட்டு மேடையைவிட்டு இறங்கிப்போனார்.
பிறகு மணிரத்னத்திடம் கேள்வி கேட்கும் முறை…
ஓ காதல் கண்மணி படம் திருமணம் செய்து கொள்ளாமலே ‘சேர்ந்து’ வாழும் லிவிங் டு கெதர் பற்றிய படமாமே… உண்மையா? என்ற கேள்வியை தமிழ்ஸ்கிரீன்.காம் எழுப்பியது.
படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்கள்தானே இருக்கிறது. அப்போது தெரிந்து கொள்ளுங்கள் – என்று நழுவினார் மணிரத்னம்.
லிவிங் டு கெதர் சரி என்கிறீர்களா அல்லது தவறு என்கிறீர்களா? என மீண்டும் கேள்வி எழுப்பினோம்.
இப்போதும் நழுவினார் மணிரத்னம்
0 comments:
Post a Comment