கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் படத்துறையினரால் ஓரங்கட்டப்பட்ட வடிவேலு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் – ‘தெனாலிராமன்’.
மன்னர் காலத்து கதையம்சத்தைக் கொண்ட இந்த நகைச்சுவை படத்தை பட்டா பட்டி என்ற படத்தை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கியிருந்தார்.
தெனாலிராமன் தெரிந்த கதை என்பதாலோ என்னவோ தெனாலிராமன் படம் அவ்வளவாக ரசிகர்களைக் கவரவில்லை. வடிவேலுவின் நகைச்சுவையும் எடுபடவில்லை.
ஆனாலும் தன் அடுத்தப் படத்திற்கும் மீண்டும் யுவராஜையே இயக்குனர் ஆக்கி உள்ளார் வடிவேலு.
யுவராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்து வரும் ‘எலி’ படம் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
படத்தின் கதை என்ன என்று கேட்டால்…. பதறிப்போகும் இயக்குநர்கள் மத்தியில் நாம் கேட்காமலே எலி படத்தின் கதையைப் பற்றி விரிவாக மட்டுமல்ல தைரியமாகவும் சொன்னார் யுவராஜ்…
“நல்லவர்கள் உள்ள கூட்டத்தில் ஒரு கெட்டவன் இருந்தால் அவனை ‘கறுப்பு ஆடு’ என்போம். கெட்டவன்களின் கூட்டத்தில் ஒரு நல்லவன் புகுந்துவிட்டால் ஏதோ ஒரு எலி இங்க இருக்குன்னு சொல்லுவாங்க. அந்த அடிப்படையில்தான் எலி என்று டைட்டில் வச்சோம்.
1960 களின் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகும் இப்படத்தில் ஒரு கொள்ளைக் கூட்டத்தில் ஸ்பையாக நுழையும் வடிவேலுவை அவர்கள் ஒரு கட்டத்தில் கண்டுபிடித்து துரத்த, எலியைப் போலவே ஓடி எஸ்கேப் ஆகி விடுவார். அவருக்கு சண்டைக்காட்சியெல்லாம் இருக்கு. ஆனா அது சீரியஸா இருக்காது. காமெடியா இருக்கும்.
இதுவரை வடிவேலு ஹீரோவா நடிச்ச படங்கள் எல்லாமே சரித்திரப் படங்களாக இருந்ததால், பேச்சுத் தமிழில் இல்லாமல் மேடைத்தமிழில் வசனங்கன் பேசினார்.. இந்தப்படம் 1960களில் நடந்தாலும் சமூகக்கதைதான். அதனால அவருக்கே உரிய பாணியில் இயல்பான தமிழ் பேசி நடிக்கிறார்.”
என்ற யுவராஜிடம், கேட்டே தீர வேண்டிய கேள்வி ஒன்று உண்டு.
வடிவேலு உடன் நடிக்க சதாவை எப்படி சம்மதிக்க வைத்தீர்கள்?
”வடிவேலு சார் ஏற்கனவே அசின், தமன்னா, ஸ்ரேயா, நயன்தாரான்னு பல முன்னணி ஹீரோயின்கள் காம்பினேஷன்ல நடிச்சிருக்காரு. அசின், தமன்னா கூட டூயட்டே பாடிருக்கார். அதையெல்லாம் சதாகிட்ட சொன்னேன். அவங்களும் கதையைக் கேட்டுட்டு அது பிடிச்சதால ஓகே சொல்லிட்டார். இருந்தாலும் இதுல ரெண்டுபேருக்கும் டூயட் எல்லாம் இல்லை.”
யுவராஜிடம் கேட்க இன்னொரு கேள்வியும் இருக்கிறது.
காமெடியனாக இருந்த காலத்திலேயே தானே இயக்குநராக மாறி டைரக்ட் பண்ண ஆரம்பித்துவிடுவார் வடிவேலு.
எலி படத்தில் வடிவேலு ஹீரோ.
யுவராஜை ஒருவழிப் பண்ணி இருப்பாரே…
கேட்டதும் பதறிவிட்டார் யுவராஜ்.
நல்லவேளை கிரீன்பார்க் ஹோட்டலில் கற்பூரம் இல்லை. இருந்திருந்தால் கையில் ஏற்றி சத்தியமே செய்திருப்பார்.
”தெனாலிராமன், இப்ப எலி என ரெண்டு மூணு வருஷமா நான் வடிவேலு சார் கூடத்தான் டிராவல் ஆயிக்கிட்டிருக்கேன். அவரை வெச்சு இப்ப ரெண்டாவது படம் பண்றேன். அப்படி எனக்கு டார்ச்சர் கொடுத்தா நான் எப்படி இந்தப்படத்தை அவரை வெச்சுப் பண்ணுவேன்?
அப்படியெல்லாம் எதுவுமே இல்லை. டைரக்ஷன் டிபார்ட்மெண்ட்ல அவர் எப்பவுமே தலையிடுறதில்ல. (நம்புறோம் பாஸ்) ரொம்ப சுதந்திரம் கொடுப்பார். நைட்டு
ரெண்டு மணி, மூணு மணிக்கெல்லாம் போன் பண்ணி யுவா நான் இப்படி ஒரு சீன் யோசிச்சேன். சொல்லவான்னு கேட்பார்.
நான் ஒரு சீனை யோசிச்சு வெச்சிருப்பேன். அவரோ தன்னோட பாடி லேங்குவேஜுக்கு ஏத்த மாதிரி ஒரு விஷயத்தை யோசிச்சு இப்படி வெச்சுக்கலாமான்னு கேட்பார். அது நாம யோசிச்சதைவிட பெட்டரா இருக்குன்னு நமக்குத் தெரியும். அப்படி தெரிஞ்சிருந்தும் அதை எப்படி அவாய்ட் பண்ண முடியும்? அவரோட இத்தனை வருஷத்தோட அனுபவங்கள்ல இருந்து நான் சினிமாவைப் பத்தி நெறைய கத்துக்கிட்டிருக்கேன். அப்படிப்பட்ட அவரைப் போய் யாருமே தப்பாப் பேசாதீங்க.”
ஒகே ஸார்ர்ர்ர்ர்ர்ர்,,
0 comments:
Post a Comment